1. மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருஷத்திலே நான் அவனைத் திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றேன்.
2. இப்போது நான் மெய்யான செய்தியை உனக்கு அறிவிப்பேன்; இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்; அதின்பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னனாகி, தன் ஐசுவரியத்தினால் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான்.
3. ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடி செய்வான்.
4. அவன் எழும்பினபின்பு, அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப்போம்.
5. தென்றிசை ராஜா பலவானாயிருப்பான்; ஆனாலும் அவனுடைய பிரபுக்களில் ஒருவன் அவனைப்பார்க்கிலும் பலவானாகி ஆளுவான்; இவனுடைய ஆளுகை பலத்த ஆளுகையாயிருக்கும்.