7. இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன்.
8. நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன்.
9. ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.
10. சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.
11. ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால்,